நிர்வாக குழு•••1
திருவள்ளுவர்
20/11/2016, 5:21 pm
திருக்குறளும் திருவள்ளுவரும்.

உலக வரலாற்றில் பல அறிஞர்களையும் தத்துவஞானிகளையும் நாம் காண்கிறோம். அவர்களுள், கி. மு. ஐந்தாம் நாற்றாண்டில் வாழ்ந்த புத்த மதத்தின் தலைவராகிய புத்தர், சமண மதத்தின் தலைவர்களுள் சிறந்தவராகக் கருதப்படும் மகாவீரர், கிரேக்கத்தைச் சார்ந்த சாக்ரடீஸ், சீனாவைச் சார்ந்த கன்ஃபூசியஸ் ஆகியவர்கள் மிகச் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்களுக்குப் பின்னரும் அறிஞர்கள் பலர் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் வாழ்ந்து, மக்களுக்கு வழிகாட்டிகளாக விளங்கி உள்ளனர். அத்தகைய அறிஞர்களுள் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் சிறப்புடைய பேரறிஞர் திருவள்ளுவர். புத்தர், மகாவீரர், சாக்ரடீஸ், கன்ஃபூசியஸ் போன்றவர்கள் பல அரிய கருத்துக்களைக் கூறியிருந்தாலும் அவர்கள் மக்களுக்குப் பயன்படும் முறையில் தங்கள் கருத்துக்களை எழுதிவைக்காமல் இறந்தனர். ஆனால், திருவள்ளுவர் தன்னுடைய அரிய கருத்துக்களை மதச் சார்பற்ற ஒரு சிறந்த நூலாக எக்காலத்துக்கும் எந்நாட்டவருக்கும் பயன்படும் வகையில் எழுதியிருக்கிறார்.

திருவள்ளுவர்: திருவள்ளுவர் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்தவர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில், திருக்குறளில் உள்ள சொற்றொடர்கள் கையாளப்படுவதால், திருவள்ளுவரின் காலம் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய நூல்களுக்கு முந்திய காலம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். கடந்த நூற்றாண்டில், பல தமிழறிஞர்கள் ஒன்றுகூடி, ஆய்வு செய்து, திருவள்ளுவர் கி.மு. 31 – ஆம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அந்த ஆய்வைத் தமிழ் நாடு அரசு ஏற்றுக்கொண்டு, திருவள்ளுவர், கி.மு. 31 – ஆம் ஆண்டில் பிறந்ததாக முடிவு செய்தது. திருவள்ளுவரின் காலத்தைச் சரியாகக் கணிக்க முடியவில்லை என்றாலும், அவர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்தார் என்பதில் அறிஞர்களிடையே கருத்து ஒற்றுமை உள்ளது. அவர் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் வசித்ததாகச் சிலர் கருதுகின்றனர்; கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்ததாகச் சிலர் கருதுகின்றனர். அவருடைய காலத்தைப் போலவே, அவர் வாழ்ந்த இடமும் நம்மால் சரியாகப் அறிந்துகொள்ள முடியாத புதிராகவே உள்ளது. அது மட்டுமல்லாமல், திருவள்ளுவருடைய வாழ்க்கை, அவருடைய குடும்பம், அவருடைய தொழில் போன்றவற்றைப் பற்றியும் ஆதாரபூர்வமாக, நம்பத்தகுந்த செய்திகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. இதுவரை நமக்குக் கிடைத்துள்ள செய்திகள் அனைத்தும் கற்பனையாகவும் கட்டுக்கதைகளாகவுமே தோன்றுகின்றன. திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் என்பதை மட்டுமே உறுதியாகக் கூறமுடிகிறது.

திருக்குறள்: திரு என்ற சொல்லும் குறள் என்ற சொல்லும் சேர்ந்து திருக்குறளாயிற்று. திரு என்ற சொல் பல பொருள்களைக் குறிக்கும் ஒரு சொல். இங்கு அழகு, செல்வம், தெய்வத்தன்மை, சிறப்பு ஆகிய பொருள்கள் குறிப்பிடத்தக்கவை. குறள் என்ற சொல் குறுமையைக் குறிக்கும் சொல். இங்கு, குறள் என்பது குறுகிய வெண்பாப் பாட்டுவகையைக் குறிக்கிறது. குறள் அல்லது குறட்பா என்னும் சொல், முதல் அடியில் நான்கு சீர்களும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் கொண்ட குறள் வெண்பாவைக் குறிக்கிறது. திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்ட நூல். மூன்று பிரிவுகளைக் கொண்ட நூலாகையால் திருக்குறள் முப்பால் என்றும் அழைக்கப்படுகிறது. முப்பால் என்பதுதான் திருக்குறளுக்கு முதலில் இருந்த பெயர் என்றும் திருக்குறள் என்ற பெயர் பிற்காலத்தில் தோன்றியது என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். திருக்குறளின் புகழைப்பாடும் 55 பாடல்கள் அடங்கிய நூல் திருவள்ளுவமாலை. இந்நூல் கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்நூலில் திருக்குறள் என்ற சொல் இல்லை. திருக்குறளை முப்பால் என்றே அனைத்துப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. ஆகவே, முப்பால் என்பதுதான் முதலில் திருக்குறளுக்கு இருந்த பெயர் என்பது தெளிவு.

திருவள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும், தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றும் மனித வாழ்க்கையின் குறிக்கோள்களாகக் கருதினர். தமிழில் உள்ள ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா என்ற நான்கு வகைப் பாடல்களும் அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பொருள்களையும் பாடுவதற்கு ஏற்றவை என்று தொல்காப்பியம் கூறுகிறது.
அந்நிலை மருங்கின் அறமுத லாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப. (தொல். செய். 105)
.
வள்ளுவர் காலத்திலும் அதற்கு முன்பும், இந்த மூன்று குறிக்கோள்களையும் பற்றித் தனித்தனி நூல்கள் வடமொழியில் இருந்தன. ஆனால், உலகிலேயே, திருக்குறள் மட்டுமே இந்த மூன்று குறிக்கோள்களையும் உள்ளடக்கிய முதல்நூல். முதல்நூல் மட்டுமல்லாமல், முன்பு இருந்த நூல்களிலிருந்து வேறுபட்டு, மதச்சார்பில்லாமல் எழுதப்பட்ட முதல்நூல் திருக்குறள்.

திருக்க்குறளைப் புகழ்ந்தவர் பலர் திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து பாடிய திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்களை எழுதியவர்களின் பெயர்களைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல என்பது தெளிவு. ஆகவே, அந்த நூல், ஒருவரோ அல்லது ஒருசிலரோ எழுதிய பாடல்களின் தொகுப்பு என்று கருதுவதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. திருவள்ளுவமாலையை எழுதியவர் எவராக இருப்பினும், திருவள்ளுவமாலையில் உள்ள பாடல்கள் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என்பதில் ஐயமில்லை. திருவள்ளுவமாலையில், திருக்குறள் கடல்போல் பரந்து விரிந்த பல கருத்துக்களையும் உள்ளடக்கிய சிறிய குறட்பாக்களால் ஆகிய நூல் என்பதை,
"அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்." என்று அவ்வையார் என்ற புலவர் எழுதியதாகக் கூறப்பட்டுள்ளது.

திருக்குறளில் சிறந்த கருத்துக்கள் இருப்பதால், புறநானூறு, பதிற்றுப் பத்து, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறப்பொருள் வென்பாமாலை, சீவக சிந்தாமணி, வில்லிப்புத்தூரார் மகாபாரதம், திருவிளையாடற் புராணம் மற்றும் கந்த புராணம் ஆகிய நூல்களில் திருக்குறளிலிருந்து மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன.

ஏசுநாதரின் மறுபிறவியாகக் கருதப்பட்ட நோபல் பரிசு பெற்ற மருத்துவர் ஆல்பர்ட் ஸ்வைட்சர் என்ற ஜெர்மானியத் தத்துவஞானி, “சீரிய கோட்பாடுகளின் தொகுப்பான திருக்குறளில் காணப்படும் அத்துணை உயர்ந்த கருத்துக்களும் உலக இலக்கியத்தில் வேறு எந்த நூலிலும் இல்லை.” என்று கூறுகிறார்.

திருக்குறளின் பெருமையை உணர்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் ஆங்கிலம், இலத்தீன், ஜெர்மன், ஃபிரெஞ்சு, மற்றும் பல மொழிகளில் அதை மொழிபெயர்த்துள்ளனர். இதுவரை, திருக்குறள் 35க்கும் மேலான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும் ஐம்பத்தைந்து மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. விவிலியத்திற்கும் திருக்குர்ரானுக்கும் அடுத்தபடியாக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல் திருக்குறள் என்று கூறப்படுகிறது. இது திருக்குறளின் பெருமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

ரஷ்யாவில் உள்ள கிரெம்ளின் மாளிகையின் அடித்தளத்தில் “டங்ஸ்டன்” என்னும் உலோகத்தால், மிகவும் உறுதியான ஒரு சிறிய அறை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்த அறையை அணுகுண்டு, நீர்வளிக்குண்டு போன்றவற்றின் தாக்குதலால் அழிக்க முடியாது. அது அத்தகைய வலிமையான அறை. பிற்காலத்தில் பெரும்போரால், பெரும்பான்மையான மக்கள் இனம் அழிந்தாலும், எஞ்சியிருப்போருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு சில நூல்கள் அந்த அறையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த நூல்களில், திருக்குறளும் ஒன்று என்பது குறிப்பிடத் தக்கது.

திருவள்ளுவரின் “இன்னா செய்யாமை” அதிகாரத்தில் உள்ள கருத்துக்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாக உருசியப் பேரறிஞர் டால்ஸ்டாய் கூறியுள்ளார். டால்ஸ்டாயின் கருத்தை அறிந்த காந்தி அடிகள், திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படித்த பின்னர், தான் திருக்குறளைத் தமிழில் படிப்பதற்காகத் தமிழ் கற்க விரும்புவதாகக் கூறினார். திருக்குறளைப் பற்றிக் கூறும் பொழுது, கிரவுல் (Dr. Graul) என்ற ஐரோப்பிய அறிஞர், ”(திருக்குறளின்) எந்த மொழிபெயர்ப்பும் மனம் கவரும் அதன் மாண்பினை வெளிக்கொணர்ந்துவிட முடியாது. அது உண்மையில் வெள்ளி வேலைப்பாடு கொண்ட தங்க ஆப்பிள் கனி” என்கிறார்.
ஜி.யு. போப் அவர்கள், ”திருவள்ளுவர் உலகம் அனைத்திற்கும் உரிய கவிஞர் (uniuversal Bard)” என்கிறார். பாரதியார், ”வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று கூறுகிறார். திருவள்ளுவர் பிறந்ததால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமே புகழ் பெற்றது என்கிறார் பாரதிதாசன்.
தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப் பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

உலக அறிஞர்கள் பலரும் புகழாரம் சூட்டிப் பாராட்டும் திருக்குறளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு சிலர் அதன் பெருமையைக் குறைத்து எடைபோடுகிறார்கள். பகவத் கீதை, மனுஸ்மிருதி, அர்த்த சாஸ்திரம் மற்றும் காமசூத்திரா ஆகிய நூல்களில் உள்ள கருத்துக்கள்தான் திருக்குறளில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். பகவத் கீதையும் மனுஸ்மிருதியும் வருணாசிரமக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. திருக்குறள் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயர்ந்த கருத்தைக் கூறும் உன்னதமான நூல். மனுஸ்மிருதியில் கூறப்பட்டிருப்பது குலவொழுக்கம். பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு வேறொரு ஒரு நீதி என்று மனுஸ்மிருதி கூறுகிறது. மனுஸ்மிருதியில் உள்ள தவறான கருத்துக்களை மறுத்து, நடுவுநிலைமை தவறாமல், குற்றம் செய்தவர் எவராக இருந்தாலும், அந்தக் குற்றத்திற்கேற்ற தண்டனையை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது திருக்குறள். எப்படி வேண்டுமானாலும் தன்னுடைய குறிக்கோளை அடையலாம் என்பது அர்த்த சாஸ்திரம். அறநெறியைப் பின்பற்றியே குறிக்கோளை அடைய வேண்டும் என்று கூறுவது திருக்குறள். ஆணும் பெண்ணும் பல கோணங்களில் உடலுறவு கொள்வதற்கும், ஒருவன் எப்படிப் பிறன்மனையாளைக் கவரலாம் என்பதற்கும் வழிகாட்டும் நூலாக காமசூத்திரா அமைந்துள்ளது. “மலரினும் மெல்லிது காமம்” என்று கூறி, அன்பின் வழிவந்த ஐந்திணையின் அடிப்படையில் அமைந்த களவொழுக்கத்தையும் கற்பொழுக்கத்தையும் போற்றுவது திருக்குறள். திரைப்படங்களைத் தணிக்கை செய்பவர்கள், திரைப்படத்தில் ஆபாசமான காட்சிகள் இருந்தால் அந்தப் படத்தை ”முதியோர் மட்டுமே பார்க்கலாம்” என்று சான்றிதழ் அளிப்பார்கள். ஆபாசாமான காட்சிகள் இல்லையென்றால், ”அனைவரும் பார்க்கலாம்” என்று சான்றிதழ் வழங்குவார்கள். காமசூத்திராவையும் திருக்குறளையும் திரைப்படங்களாகக் கருதினால், காமசூத்திரா பெறும் சான்றிதழ் “முதியோர் மட்டுமே பார்க்கலாம்” என்றும், திருக்குறளுக்குக் கிடைக்கும் சான்றிதழ், “அனைவரும் பார்க்கலாம்” என்றும் இருக்கும் என்பதில் சற்றேனும் ஐயமில்லை. ஆகவே, திருக்குறள் மனுஸ்மிருதியையும், பகவத் கீதையையும், அர்த்த சாஸ்திரத்தையும், காமசூத்திரத்தையும் தழுவி எழுதப்பட்ட நூலன்று. அவற்றிலுள்ள கருத்துக்கள் தவறு என்று சுட்டிக்காட்டி அறநெறியைத் தழுவி எழுதபட்ட நூல் திருக்குறள். தவறான கருத்துக்களைக் கூறி, காலத்தால் அழிக்க முடியாத திருக்க்குறளை வஞ்சகத்தால் சிறுமைப்ப்டுத்த முற்படுபவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றி அடையாது என்பது உறுதி.

திருக்குறள் உரைகள்: திருக்குறளுக்குப் பல உரைகள் உள்ளன. அவற்றுள் மிகப் பழமையானவையாகக் கருதப்படும் உரைகள் பத்து. அவற்றைப் பற்றிக் கூறும் பழம்பாடல் ஒன்று உள்ளது.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்.
இவர்களில் பரிமேலழகர், மணக்குடவர், காளிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய ஐவர் உரைகள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. இந்த உரைகளுள், மணக்குடவர் உரை காலத்தால் முந்தியதாகவும், பரிமேலழகர் உரை பதிநான்காம் நூற்றாண்டைச் சார்ந்ததாகவும், காளிங்கர், பரிதி, பரிப்பெருமாள் ஆகிய மூவரின் உரைகள் மணக்குடவர் உரைக்குப் பின்னரும் பரிமேலழகர் உரைக்கு முன்னதாகவும் தோன்றியதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஐவரின் உரைகளிலும் குறள் வைப்புமுறையும் அதிகாரத் தலைப்புகளும் மாறுப்பட்டுக் காணப்படுகின்றன. சில பாடவேறுபாடுகளும் உள்ளன. மணக்குடவர் சமண மதத்தைச் சார்ந்தவராகையால் அவர் உரையில் சமணமதத்தின் தாக்கத்தைக் காணமுடிகிறது. இவ்வுரைகளுள் பரிமேலழகர் உரை, சிறந்ததாகக் கருதப்பட்டாலும், அதிலும் குறைகள் இல்லாமல் இல்லை. பரிமேலழகர் உரையில் சமயக் கருத்துக்களும், வருணாசிரமக் கொள்கையைச் சார்ந்த கருத்துக்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த தமிழறிஞர், மொழிஞாயிறு தேவநேயப்பாவணர், தாம் எழுதிய திருக்குறள் மரபுரை என்ற நூலில் பரிமேலழகரின் உரையில் எங்கெல்லாம் சமயக் கருத்துக்களும் வருணாசிரமக் கருத்துகளும் உள்ளனவோ அவற்றை சுட்டிக்காட்டுகின்றார். பாவேந்தர் பாரதிதாசன், ”பரிமேலழகர் திருக்குறளுக்கு எழுதியது உரையன்று; அது அவர் திருக்குறளுக்கு இட்ட திரை.” என்று பரிமேலழகர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறார்,
பரிமேலழகருக்குப் பின்னர், திருக்குறளுக்கு எண்ணற்ற அறிஞர்கள் உரை எழுதி உள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், திருக்குறளில் உள்ள அனைத்துக் குறட்பாக்களுக்கும் பல உரைகளை ஒப்பிட்டு, 1980- ஆம் ஆண்டு எட்டுத் தொகுதிகளாக, திருக்குறள் உரைக்களஞ்சியம் என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதுபோலவே, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசியர் இரா. சாரங்கபாணி அவர்கள் திருக்குறளின் அறத்துபாலில் உள்ள 380 குறட்பாக்களுக்கும் , பொருட்பாலில் உள்ள 700 குறட்பாக்களுக்கும் பலருடைய உரைகளை ஒப்பிட்டு, திருக்குறள் உரைவேற்றுமை – அறத்துப்பால், மற்றும் திருக்குறள் உரைவேற்றுமை – பொருட்பால் என்று இரண்டு தொகுதிகளாக இரண்டு நூல்களை 1989-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர், பேராசியர் இரா, சாரங்கபாணி ஆகியோரின் உரைகள் மிகச் சிறந்த உரைகள் என்றால் அது மிகையாகாது. இந்த உரைகள் திருக்குறளை ஆய்வு செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளவை என்பதில் ஐயமில்லை.

கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும், திருக்குறளுக்குப் பல உரைகள் வெளிவந்துள்ளன. இந்த உரைகளிலும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. சில உரைகளில் ஒவ்வொரு அதிகாரத்திலும் குறட்பாக்களின் வைப்புமுறையும் அதிகாரத்தின் பெயர்களும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை. திருக்குறளில் உள்ள முதல் நான்கு அதிகாரங்களும் இடைச்செருகல் என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறு தங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப உரையாசிரியர்கள் தங்கள் உரைகளில் தங்கள் கருத்துக்களைக் கூறுவது ஆய்வுக்கு ஏற்றதாக இருந்தாலும், அது பல வாசகர்களுக்குத் தவறான கருத்துக்களையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கும் என்று தோன்றுகிறது.

திருக்குறளை எப்படிக் கற்க வேண்டும்?
மறைந்த மூதறிஞர் வ. சுப. மாணிக்கம் அவர்கள் “வள்ளுவம்” என்ற நூலில் திருக்குறளை எப்படிப் கற்க வேண்டும் என்பதைப் பற்றித் தன்னுடைய கருத்துக்களைக் கூறுகிறார்.

· மூலத் திருக்குறள் முழுமையும் (உரைகட்கு அடிமைப் படாது) கற்றல்
· திருவள்ளுவர் நெஞ்சறிந்து கற்றல்
· கற்பவர்தம் வாழ்நிலையோடும் தம் காலநிலையோடும் பொருந்திக் கற்றல்
· கற்றபின் நிற்க வேண்டும் என்ற செயல் முனைப்பொடு கற்றல்

இக்காலத்தில், உரைகளின் உதவியின்றிப் பலராலும் திருக்குறளைக் கற்க முடியாது. ஆனால், அவர்கள் ஒரு உரையை மட்டுமே படிக்காமல், பல உரைகளையும் ஒப்பிட்டுப் படித்து, தானாகவும் சிந்தித்து, “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” என்ற குறளுக்கேற்ப, திருக்குறளை முழுமையாகக் கற்றுத் தெளிவுபெற்றால்தான் வள்ளுவரின் உள்ளக் கிடக்கையை அறிந்துகொள்ள முடியும். மற்றும், “கற்க கசடறக் கற்பவை; கற்றபின் நிற்க அதற்குத் தக.” என்ற வள்ளுவரின் கட்டளைக்கேற்ப குறள்வழி வாழ்ந்தால்தான் திருக்குறள் கற்றதின் பயனைப் பெற முடியும்.

CREATE NEW TOPICInformation

திருக்குறளும் திருவள்ளுவரும்

From திருவள்ளுவர் பேரவை

Topic ID: 16

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on TVR Social

Post no conditions, without approval

Unlimited number of posts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...